குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அனுப்ப தயாராக இருக்கிறேன். பொன்.ராதா கிருஷ்ணனும், தமிழிசையும், முடிந்தால் மோடியையும் அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கத்துக்கு செல்லலாம் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நிலவிவரும் பிரச்சனையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று ஒரு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும், அதில் மு.க.ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைக்கும்படியும் கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், "காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதற்கான காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது.
ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரதமர் மோடி ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார். இப்போது பொன்.ராதாகிருஷ்ணனும் அவரைப்போலவே பேச ஆரம்பித்துவிட்டார்.
சிறப்பு விமானம் ஏற்பாடு செய்வதாகவும், அதில் காங்கிரஸ் தலைவரும், திமுக செயல் தலைவரும் கர்நாடகத்துக்கு செல்ல வேண்டும் என்றும் மனம் போன போக்கில் பேசி இருக்கிறார். மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயத்தை மாநில அரசு மீது போடுவது என்ன நியாயம்?
நான் வேண்டுமானால் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அனுப்ப தயாராக இருக்கிறேன். அதில் பொன்.ராதா கிருஷ்ணனும், தமிழிசையும், முடிந்தால் மோடியையும் அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கத்துக்கு செல்லலாம். பேச வேண்டிய நேரத்தில் எதை பேச வேண்டும் என்று தெரியாமல் பேசுபவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.