ஒரு படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா இருக்கு.. ஆனா இல்ல.. என்று ஒரு டயலாக் பேசுவார். அது புதிதாகத் தமிழகத்தில் தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்கு கணக்கச்சிதமாய் பொருந்துகிறது. தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரிஷிவந்தியம்,ஆலங்குளம்,சங்கரன்கோயில்,ஜெயங்கொண்டம்,புலிக்குளம் தாரகம்பாடி,வானூர், ஸ்ரீவில்லிபுத்தூர்,குத்தாலம் மற்றும் சோளிங்கர் ஆகிய 10 இடங்களிலும் கல்லூரிகள் துவக்கப்பட்டது .
இந்த பத்து கல்லூரிகளில் இரண்டு பெண்களுக்கான கல்லூரிகளாகும். மீதமுள்ள 8 கல்லூரியில் இருபால் மாணவர்களும் பயிலும் கல்லூரிகள் பெயரளவுக்குத் தான் கல்லூரிகள் துவக்கப்பட்டிருக்கிறது.இந்தப் பத்துக் கல்லூரிகளிலும் மொத்தம் 2ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இன்னும் ஒரு ஆசிரியர் கூட நியமனம் செய்யப்படவில்லை.கொரானா தொற்று பரவல் காரணமாகக் கல்லூரிகள் திறந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்து வகுப்புகளை நடத்தும் முறை இன்னும் பின்பற்றப்படவில்லை.எனினும் இந்த கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்பதால் ஆன்லைனில் பாடங்களும் நடத்தப்படவில்லை.வரும் டிசம்பர் மாத முதல்வாரம் செமஸ்டர் தேர்வுகளை நடத்தப் பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளன.
செமஸ்டர் தேர்வு எழுதும் முன்பு மாணவர்களின் கல்வித் திறனை மதிப்பிட்டு உரிய மதிப்பெண்களும் வழங்கியும் அந்த மதிப்பெண் பட்டியலை அனுப்பும் படியும் பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளது.ஆசிரியர்கள் இல்லாமல் ஆன்லைன் வகுப்புக்களும் நடத்த முடியாமல் உள்ள கல்லூரிகளில் சேர்ந்துள்ள எங்களின் கல்வி திறனை யார் எப்படி மதிப்பிடுவார்கள் ? எப்படி மதிப்பிட்டு எப்படி மதிப்பெண்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவார்கள் ? என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இதற்கு பதிலளிக்கத்தான் யாரும் இல்லை.