மதுரை திருநகரை அடுத்துள்ள தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2018ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் ஆரம்பக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெறவில்லை.இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம்.கடோச் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவராக உள்ளார். சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன், தமிழக தலைமைச் செயலாளர், மத்திய சுகாதாரத் துறை இயக்குனர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்திய அறிவியல் கழக டாக்டர் விஜயலட்சுமி சக்சேனா, ஜோத்பூர் எய்ம்ஸ் டாக்டர் பங்கஜ்ராவ், திருப்பதி வெங்கடேஸ்வரா மெடிக்கல் இன்ஸ்டியூட் டாக்டர் வனஜாக்சம்மா, ஆக்ராவில் உள்ள சரோஜினிநாயுடு மருத்துவமனை டாக்டர் பிரசாந்த் லாவனியா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் சண்முகம் சுப்பையா ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், டாக்டர் சண்முகம் சுப்பையா, தனது பக்கத்து வீட்டுக்கு அருகே சிறுநீர் கழித்து அங்கு வசித்த பெண்ணுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகப் புகாரில் சிக்கியவர். அத்துடன் இவர் பாஜக ஆதரவு சங்கத்தைச் சேர்ந்தவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனால், அவரை நியமித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரவிக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், பெண்ணை துன்புறுத்திய வழக்கில் சிக்கியவரை நியமித்தது, பெண்களை அவமதிப்பதில்லையா? என்று கேட்டிருக்கிறார்.
மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் RSS உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காகக் கொடுக்கப்படும் பரிசா ? இது தான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ... என்று கேட்டிருக்கிறார்.