பொதுவாகவே அரசு அலுவலகங்களில் இலஞ்சம் தலைவிரித்தாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் கொரோனா தொற்று உலகையே பயமுறுத்தினாலும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை மட்டும் விடவில்லை. இந்நிலையில் தமிழக மாநில அரசு போனஸ் அறிவிக்காத நிலையில் தீபாவளி வசூலாக பல்வேறு அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.மதுரை, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு நடைபெறுவதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த சோதனைக்குப் பின் பதிவாளர் பாலமுருகன் அறையில் இருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 46 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது.விழுப்புரம் மாவட்டம் வானூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பத்திரப்பதிவு நடப்பதாகப் புகார் வந்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பிடிபட்டுள்ளது.
உதகை மின்வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் 2 லட்சம் ரூபாயும், பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகம், நெல்லிக்குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 58 ஆயிரம் ரூபாயும் பிடிபட்டுள்ளது.தீபாவளி நெருங்குவதால் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.