சசிகலாவின் தண்டனைக் காலம் 2021ம் ஆண்டு துவக்கத்தில் முடிவடைகிறது. இதற்கிடையே, நன்னடத்தை விதிகளின்படி அவருக்கு தண்டனை குறைக்கப்படுவதாகவும், இன்னும் சில மாதங்களில் அவர் வெளியே வருவார் என்றும் அவ்வப்போது செய்திகள் உலா வந்தன. பாஜகவைச் சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ட்விட் போட்டார். அதில், ஆக.14ம் தேதியன்று சசிகலா விடுதலை ஆகப் போகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பரபரப்பு ஏற்பட்டு, கடைசியில் அது பொய்யாகிப் போனது. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் ஒரு விளக்கம் அளித்திருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார்.
அதற்கு சிறையின் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் லதா அளித்த பதிலில், சசிகலா தண்டனைக் காலத்தின்படி 2021ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே, முன்னதாக ``தன்னைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் கொடுக்கக் கூடாது" என்று சசிகலா சிறை நிர்வாகத்திடம் முறையிட்டு இருந்தார். அதையும் தாண்டி, எப்படி இந்த தகவலை பெறப்பட்டது என்பதை நரசிம்மமூர்த்தி என்பவர் பேசியிருக்கிறார்.
அதில், ``சசிகலா கோரிக்கையின்படி முதலில் எனக்கு தகவல் கொடுக்க சிறை நிர்வாகம் மறுத்திருந்தது. ஆனால் சிறைத்துறை ஆணையத்தில் எனது தரப்பு வாதங்களை முன்வைத்தேன். அதில், `சசிகலாவின் ஆதார் கார்டு, பேன் கார்டு, சொத்து விபரம், வங்கி கணக்கு போன்ற தனிப்பட்ட விவரங்களை நான் கேட்கவில்லை. அது அவருடைய தனிப்பட்ட விஷயம் தனிப்பட்ட உரிமை. அந்த தகவல்கள் எனக்கு வேண்டாம். ஆனால், ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் சிறைக்கு அனுப்பப்பட்டு, சிறையில் மக்களுடைய வரி பணத்தில் உணவு, உடை என சசிகலாவுக்கு வழங்கப்படுகிறது. எங்கள் வரிப்பணத்தில் வாழும் அவரைப் பற்றிய பொதுவான தகவல்கள் கொடுக்கக் கூடாது என்பது முறையல்ல' என்று நான் வாதிட்ட பிறகே எனக்கு ஆர்டிஐ தகவல் கொடுக்கப்பட்டது" என தான் சந்தித்த சிக்கல் குறித்து கூறியுள்ளார்.