தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பு ..!

வி.பி.எஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது..!

by Balaji, Nov 5, 2020, 15:54 PM IST

வி.பி.எஃப் கட்டணத்தை யார் கட்டுவது என்பது தொடர்பாகத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது டிஜிட்டல் முறையில் திரையிடும் நிறுவனங்களில் வாதமாக இருக்கிறது.நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் கைவிடப்பட்ட தாக தெரிகிறது.

திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், படத்தை டிஜிட்டல் முறையில் திரையிடும் க்யூப், சோனி, வி.எப்.ஓ உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இணைந்து இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது.

சி-பார்ம் வைத்துள்ள திரையரங்கு நடத்தும் உரிமையாளர்களிடம் மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம், 50 திரையரங்குகள், 100 திரையரங்குகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பேச்சு வார்த்தைக்கு வரும் திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவில்லை எனத் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் விற்கப்படும் டிக்கெட் விற்பனைத் தொகையைத் தயாரிப்பாளர்கள் 50 சதவீதமும் திரையரங்கு உரிமையாளர்கள் 50சதவீதம் எனப் பிரித்துக் கொள்வது என்ற நடைமுறையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்

இதன் காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல். எனவே இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படும் வரை தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாது என்பதுதான் இப்போதுள்ள சூழ்நிலை.

இந்நிலையில்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு இது குறித்து கூறுகையில்திரையரங்குகள் திறக்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தற்போது இந்த பிரச்சனையை தீர்ப்பது கொஞ்சம் கடினமானது . எனவே வரும் 10 ம் தேதி முன்பு போல் திரைப்படங்களை திரையிட அனுமதித்துவிட்டு அதன் பின்னர் கியூப் மற்றும் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மூவரும் கலந்து பேசி இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

You'r reading தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பு ..! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை