பள்ளிகள் திறக்கப்படுமா? பெற்றோரிடம் கருத்து கேட்பு..

by எஸ். எம். கணபதி, Nov 9, 2020, 09:13 AM IST

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. சென்னை, கோவை, சேலம் உள்பட 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா பாதிக்கிறது. பெரும்பாலான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன.

இந்நிலையில், பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் 16ம் தேதி முதல் வகுப்புகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவிய செய்தி வெளியானது.

இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகளை இப்போது திறக்கக் கூடாது என்று அரசியல்கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, வரும் 16-ம்தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாமா? என்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி பதில் பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.அதன்படி, தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் பள்ளிகளில் இன்று காலையில் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்படுகிறது.

பள்ளிகளைத் திறக்கலாமா, திறக்க வேண்டாமா? திறக்க வேண்டாம் என்றால் அதற்கான காரணம் என்ன என்று பெற்றோரிடம் கேள்வி எழுப்பி பதில் பெறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 9, 10, 11, 12 படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் தமிழக அரசு தனது முடிவை அறிவிக்க உள்ளது.பெற்றோரிடம் கருத்துக் கேட்கத் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தலைமை ஆசிரியர்கள் சங்கமோ பள்ளிகளை ஜனவரியில் திறக்க வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது.

You'r reading பள்ளிகள் திறக்கப்படுமா? பெற்றோரிடம் கருத்து கேட்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை