தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் செல்போன் கடை வைத்திருந்த ஜெபராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஒன்பது போலீசார் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலும் சிலர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சிலரும் மதுரை நீதிமன்றத்தில் சிலரும் மனுத் தாக்கல் செய்து உள்ளார்கள் வழக்கு சிபிஐ விசாரணை செய்வதால் எங்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளதாகத் தெரிவித்து இந்த வழக்கைச் சிறப்பு அமர்வுக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இதன்படி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரணை செய்யப்பட்டது. இதில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சிபிஐ நீதிமன்றம் மதுரையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.எனவே இந்த வழக்கில் ஜாமின் கோரிய மனு மற்றும் விசாரணை வழக்குகள் என அனைத்தும் இனி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும். இந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரம் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.எனவே விசாரணையும் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.