பிறந்ததும் ஒன்றாய்.. இறந்ததும் ஒன்றாய்..

தூத்துக்குடி அருகே இரட்டையர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

by Balaji, Nov 12, 2020, 15:29 PM IST

தூத்துக்குடி மாவட்டம், புதிய புத்தூர் அருகேயுள்ள மேல அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பூரணம். இந்த தம்பதியருக்கு அருண் சுரேஷ் (12) அருண் வெங்கடேஷ் (12) என இரட்டை ஆண் குழந்தைகள் உண்டு. செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பூரணம் தனது மகன்களுடன் தனது தாயின் பாதுகாப்பில் வசித்து வந்தார்.

சிறுவர்களின் பாட்டி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். பாட்டிக்குத் தினசரி சாப்பாடு கொடுப்பதற்காகச் சிறுவர்கள் 2 பேரும் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து செல்வது வழக்கம். இதேபோல் நேற்று மதியமும் அவர்கள் பாட்டிக்குச் சாப்பாடு கொடுப்பதற்காகச் சைக்கிளில் வந்துள்ளனர். பின்னர் வீடு திரும்பும் வழியில் அருகில் இருந்த ஊருணிக்குச் சென்று குளித்ததாகத் தெரிகிறது.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கையில் நீர்ச் சுழலில் சிக்கி இரட்டையர்கள் இரண்டு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். அக்கம்பக்கத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் சிறுவர்களின் அபயக்குரல் கூட யாருக்கும் கேட்கவில்லை. இதனால் சிறுவர்கள் இரண்டு பேரும் ஊருணியில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.சாப்பாடு கொடுக்கச்சென்ற சிறுவர்கள் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதட்டம் அடைந்த உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்குத் தேடியும் சிறுவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை சந்தேகத்தின் பேரில் ஊருணிக்குச் சென்று உறவினர்கள் தேடிப் பார்க்கையில் ஊருணியில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்த தகவல் புதியம்புத்தூர் போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையின் உதவியுடன் இறந்தவர்களின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தந்தை இறந்த சில ஆண்டுகளிலேயே இரட்டையர்களான சிறுவர்கள் இரண்டு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading பிறந்ததும் ஒன்றாய்.. இறந்ததும் ஒன்றாய்.. Originally posted on The Subeditor Tamil

More Thoothukudi News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை