ரோகித் சர்மாவை ஒருநாள் டி20 கேப்டனாக நியமிக்காவிட்டால் இந்திய அணிக்குத் தான் நஷ்டம் : கவுதம் காம்பீர்

by Nishanth, Nov 12, 2020, 15:46 PM IST

ரோகித் சர்மாவை டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக நியமிக்க விட்டால் இந்திய அணிக்குத் தான் அது பெரும் நஷ்டமாக அமையும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் கூறினார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் வேறு எந்த அணியும் ஐந்து முறை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஐந்து முறையும் ரோகித் சர்மா தான் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். இந்நிலையில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் முதலில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. எந்த அணியிலும் ரோகித் சேர்க்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காயம் காரணமாகவே அவர் நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் போட்டியின் போது காயமடைந்த மாயங்க் அகர்வால், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உட்படப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் வீரர்கள் தேர்வில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவரது காயம் முழுமையாகக் குணமடைவதற்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் கூறியது: ரோகித் சர்மாவை இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டிய காலம் கடந்து விட்டது. கோஹ்லி ஒரு மோசமான கேப்டன் என்று நான் கூற மாட்டேன். ஆனால் டெஸ்ட் போட்டிக்கும், கட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிப்பது நல்லதாகும். சமீப காலத்தில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் இதேபோல தனித்தனி கேப்டன்களை நியமித்து வெற்றி கண்டுள்ளனர். ரோகித் சர்மா கேப்டனாக இருந்து 5 முறை தனது அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார். ஆனால் கோஹ்லியால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய கிரிக்கெட் அணிக்குத் தான் நஷ்டமாகும். ரோகித்துக்கு எந்த நஷ்டமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading ரோகித் சர்மாவை ஒருநாள் டி20 கேப்டனாக நியமிக்காவிட்டால் இந்திய அணிக்குத் தான் நஷ்டம் : கவுதம் காம்பீர் Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை