நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக தலைமையில் பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்ட நடைபயணத்தில் தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் எனும் ஊரிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் உள்ளே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது.
இதனை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம் நியூட்ரினோ எதிர்ப்பு எதிரிவிக்க ஒன்றிணைய வேண்டும் என்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக்காக தொடர்ந்து 10 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக, மதுரை பழங்காநத்தத்தில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கினார் வைகோ. இந்த நடைப்பயணத்தை பயணத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிலையில் பழங்காநத்தம் மேடை அருகே நடைபயணம் செல்லுகையில் சிவகாசியை சேர்ந்த ரவி என்ற மதிமுக தொண்டர் ஒருவர் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி பெரும் பரப்படைந்தது.
இதனையடுத்து மேடையில் கண்ணீருடன் பேசிய வைகோ, “தீக்குளித்த அவரை காப்பாற்ற இயற்கை அன்னையிடம் வேண்டுகின்றேன் . அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள்” என காவலருக்கு வலியுறுத்தி கண்ணீர் மல்க நடைபயணத்தை தொடங்கினார்.