தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள சூரப்பா, தமிழக அரசுக்குத் தெரியாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு , ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசனைத் தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது. மேலும் , சூரப்பா மீது விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். சூரப்பா மீதான குற்றச்சாட்டு குறித்த ஆவணங்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் செயல்படத் தனி அலுவலகம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அலுவலகம் அமைக்கப்பட்டதும் ஓரிரு நாளில் விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையில், நான் எந்த ஒரு விதியையும் மீறவில்லை , ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்கியது கிடையாது என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.