மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் கேரளா முல்லைப் பெரியாரில் புதிய அணை திட்ட அறிக்கை தயாராகிறது...!

by Nishanth, Nov 17, 2020, 17:05 PM IST

கடந்த சில வருடங்களாக ஓய்ந்திருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மீண்டும் சர்ச்சையாக்கும் நடவடிக்கைகளில் கேரளா இறங்கியுள்ளது. புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கக் கேரள அரசு மீண்டும் தீர்மானித்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது இந்த அணை கடந்த 1895ம் ஆண்டு கட்டப்பட்டது.

அணை இருக்கும் இடம் கேரளா தான் என்றாலும் அணை கட்டப்பட்ட போது ஏற்படுத்தப்பட்ட 999 வருட ஒப்பந்தத்தின் மூலம் தமிழக பொதுப்பணித்துறை தான் அணையைப் பராமரித்து வருகிறது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி, உயரம் 155 அடி. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தேக்கடி புலிகள் சரணாலயம் உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவது உட்பட விவகாரங்களால் கேரளா மற்றும் தமிழகம் இடையே தீராத பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்று கேரள அரசு பல ஆண்டுகளாகக் கூறி வருகிறது. இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த எதிர்ப்பை மீறிக் கடந்த 2011ல் கேரளா புதிய அணைக்கான திட்ட அறிக்கையைத் தயாரித்தது. அதன்படி செலவு ₹663 கோடி என்று மதிப்பிடப்பட்டது. 4 ஆண்டுகளில் அணைக் கட்டி முடிக்கப்படும் எனவும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போதுள்ள அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில், பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிய அணை கட்ட இடமும் தேர்வு செய்யப்பட்டது. அணை கட்டுவதற்கு முன்னோடியாகக் கடந்த 2014ல் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தது. அணைக் கட்டும் ஆய்வை நடத்தும் பொறுப்பை ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் கேரள அரசு ஒப்படைத்தது.இதற்கிடையே கேரள அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து கேரள அரசு புதிய அணை தொடர்பான நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்நிலையில் அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து புதிய அணைக்கான ஆய்வுப் பணிகளை மீண்டும் தொடங்க கேரளா தீர்மானித்துள்ளது. இது தொடர்பாகத் திட்ட அறிக்கை தயாரிக்கக் கேரள நீர்வளத்துறையின் கீழுள்ள நீர்ப்பாசனம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு வாரிய கூடுதல் தலைமைச்செயலாளர் ஜோசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்க ஒரு குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அணை கட்ட ₹1,000 கோடி செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை