கொரோனா சூழல் காரணமாகக் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது மீண்டும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அரியர் தேர்வுக்குக் கட்டணம் கட்டியிருந்தால் தேர்விலிருந்து விலக்கு என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால் இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட அண்ணா யூனிவர்சிட்டி மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை சில நாட்களுக்கு முன்நடந்தது. அப்போது, யுஜிசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், `பல்கலைக்கழகத்தின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்றும், தேர்வுகளை கட்டாயமாக எழுதியே ஆக வேண்டும்' என்று கூறப்பட்டதது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணை நடந்தது.
அப்போது அரியர்ஸ் வழக்கு விசாரணையை காண வீடியோ கான்பரன்ஸில் ஏராளமான மாணவர்கள் நுழைந்ததால் இடையூறு ஏற்பட்டது. இதனால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது. மேலும் காணொலியில் இருந்து மாணவர்கள் வெளியேறாவிடில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.