உருவானது நிவார் புயல்... தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும். கனமழை காரணமாகத் தமிழகத்துக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

by Balaji, Nov 23, 2020, 09:18 AM IST

நாளை மறுநாள் உருவாகவிருக்கும் புயலுக்கு நிவார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிவார் என்றால் பாதுகாப்பு அல்லது தடுப்பு என்று பொருள்.இந்தியப் பெருங்கடல் அருகே உருவாகும் புயல்களுக்கு ஏற்கெனவே ஆம்பன், நிசர்கா, கடி என புயலுக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது நிவார்.வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, இன்று மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவானது. இது நாளை மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் புதுச்சேரியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 740 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.நிவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன்கிழமை நண்பகல் வாக்கில் கரையைக் கடக்கும் .

இதன் காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் செவ்வாய் முதல் வியாழன் வரை இடியுடன் கூடிய மழை , ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் வரும் 25ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை அதி கனமழை பெய்யக் கூடும் .இது தவிரச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஒரு சீல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

புதனன்று டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் . வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நிவர் புயல் காரணமாகத் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அதி கனமழை பெய்யக் கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமான புயலை விட இந்த புயல் பலம் மிக்கதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. கடலுக்குச் சென்று இருந்த மீனவர்கள் கரை திரும்பினர். இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றமும் அதிகமாக உள்ளது.எண்ணூர், புதுச்சேரி கடலூர், ராமேஸ்வரம் பாம்பன் ஆகிய துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்