தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு.. அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்கள்.. கவர்னரிடம் ஸ்டாலின் பேச்சு..

by எஸ். எம். கணபதி, Nov 24, 2020, 13:24 PM IST

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகளான அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்களோ, அதே போல் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று கவர்னரிடம் ஸ்டாலின் கூறியுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று(நவ.23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வாதிடும் போது, எம்டிஎம்ஏ விசாரணையில் பேரறிவாளன் தொடர்பாக எதுவும் விசாரிக்கப்படவில்லை. அன்னிய சதி குறித்துதான் விசாரிக்கப்படுகிறது. எனவே, பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், அரசியல் சட்டப்பிரிவு 142ல் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கவர்னருக்கு இந்த விஷயத்தில் உத்தரவிட விரும்பவில்லை.

அதே சமயம், இவ்விவகாரத்தில் 2 ஆண்டுகளாக கவர்னர் முடிவெடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது என்று தெரிவித்தனர். இந்நிலையில், கவர்னர் விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பலவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொன்முடி, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் இன்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர் புரோகித்தைச் சந்தித்து, 7 பேர் விடுதலையில் விரைவாக நல்ல முடிவெடுக்க வேண்டுமென்று கவர்னரிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். கோரிக்கை மனுவையும் அளித்தார். பின்னர், ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவதுஊ
பேரறிவாளன் உள்பட 7 பேரும் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள். அவர்களை விடுவிக்க வேண்டுமென்று 2018ம் ஆண்டு செப்டம்பரில் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை அனுப்பியது.

ஆனால், கவர்னர் இதில் முடிவெடுக்கவில்லை. சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் அளித்த பதிலில், இந்த விஷயத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்றும், கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறது. எனவே, சட்டரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென்று கோரினோம். இந்த விஷயத்தில் முறையாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார். கவர்னர் என்ன பதில் சொன்னார்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, சட்ட விளக்கங்கள் குறித்து கேட்டார். அதை விளக்கினோம். ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, தர்மபுரியில் பஸ் எரிப்பு சம்பவம் நடைபெற்று அதில் 3 மாணவிகள் இறந்தார்கள். அந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்களோ, அதே போல் இவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்றோம்.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தன்னந்தனியாக இத்தனை ஆண்டுகளாக போராடி வருகிறார். அதையும் எடுத்து கூறினோம் என்று ஸ்டாலின் பதிலளித்தார். கவர்னர் பதில் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, இப்போது திருப்தியுடன்தான் செல்கிறோம் என்றார். கவர்னரிடம் வேறு விஷயங்கள் பேசினீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, பல விஷயங்கள் பேசினோம். அதையெல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது என்று பொடி வைத்து பதில் கொடுத்து விட்டு புறப்பட்டார் ஸ்டாலின்.

More Tamilnadu News


அண்மைய செய்திகள்