நிவர் புயல் தமிழகத்தை உலுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த நிவர் புயலின் வரலாறை தெரிந்துகொள்ளலாம். இந்தப் புயலுக்கு நிவர் எனப் பெயர் வைத்தது இந்தியா கிடையாது. ஈரான் இந்தப் பெயரை வைத்தது. ஆம். எப்போது புயல்களுக்கு இந்தியா மட்டுமே பெயர் வைப்பது கிடையாது. புயல்களுக்கு பெயர் வைப்பதுக்கென்றே 13 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஒமன், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன். இந்த 13 நாடுகள் அந்தக் கூட்டமைப்பில் உள்ளன. அரபிக் கடல், வங்காள விரிகுடா கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்த நாடுகளே பெயர்களை வைக்கின்றன.
ஒவ்வொரு நாடும் புயல்களுக்கு 13 பெயர்களை பரிந்துரை செய்யலாம். அதில் இருந்து ஒரு பெயரை உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு மற்றும் ஒருசில அமைப்பு இணைந்து தேர்வு செய்யும். அப்படிதான் தற்போது வந்துள்ள நிவர், இதற்கு முன்வந்த வர்தா, ஒக்கி, கஜா போன்ற புயல்களுக்கு பெயர் வைக்கப்பட்டது. 13 நாடுகளும் பெயர்களை பரிந்துரை செய்தாலும், அந்தப் பெயர்கள் அரசியல், கலாச்சாரம், மத நம்பிக்கை போன்றவற்றை குறிக்கும்படி இல்லாமல் பொதுவான பெயராக, அதிகபட்சமாக 8 எழுத்துக்களுக்குள், எளிதில் மக்கள் உச்சரிக்கும்படி இருக்க வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள் உள்ளன. இதைவிட ஒரு கூடுதல் தகவல், அடுத்த 25 வருடங்களில் வரப்போகும் புயல்களுக்கான பெயர் பட்டியல் இப்போதே வானிலை மையங்களில் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.