மொபைல் போன் திருடர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிப் பிடித்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த வெள்ளியன்று சென்னை மாதவரத்தில் நடந்த இந்த தீர சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு காமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அக்காட்சியை சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மாதவரம் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் இரண்டு பேர் மொபைல் போனை பறித்துக்கொண்டு இன்னொரு மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளனர். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த மாதவரம் சப் இன்ஸ்பெக்டர் ஆன்ட்லின் ரமேஷ், தமது மோட்டார் சைக்கிளில் திருடர்களை விரட்டி சென்றுள்ளார்.
திருடர்களின் மோட்டார் சைக்கிள் தடுமாறிய சமயம், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தமது மோட்டார் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டுப் பாய்ந்து அவர்களைப் பிடித்துள்ளார். ஒருவர் தப்பிவிடக் குற்றவாளிகளில் ஒருவன் மாட்டியுள்ளான். அருண்ராஜ் (வயது 20) என்பனை பிடித்த சப் இன்ஸ்பெக்டர் அவனைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளார். அருண் ராஜ் கொடுத்த தகவலின் பேரில் அவனது நண்பர்கள் நவீன்குமார், விக்னேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திருடுவதற்கு அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டதுதான் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
"இது ஏதோ ஒரு சினிமாவில் உள்ள காட்சியல்ல. உண்மை கதாநாயகன் சப் இன்ஸ்பெக்டர் ஆன்ட்லின் ரமேஷ் தனியாக மொபைல்போன் திருடனை விரட்டிப் பிடித்த காட்சி" என்று ட்விட்டரின் பதிவிட்டிருந்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், ஆன்ட்லின் ரமேஷை நேரில் அழைத்தும் பாராட்டியுள்ளார்.