புரேவி புயல்... தாமிரபரணி நதியில் குளிக்க, வேடிக்கை பார்க்க தடை!

by Sasitharan, Dec 1, 2020, 19:13 PM IST

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இலங்கையில் திரிகோணமலையில் இருந்து 750 கிமீ, கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 1150 கிமீ தொலைவிலும் உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. புரேவி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் புயல் நாளை (டிசம்பர் 2) இலங்கையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ``தமிழகத்தில் அதி தீவிர மழை எச்சரிக்கையை அடுத்து ஆறுகளின் கரைகளை கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் செய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது". மேலும் டிசம்பர் 2,3,4ம் தேதிகளில் அதிகமான மழை பொழியும் என்பதால் மக்களை பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை செய்துள்ளது.

இதனையடுத்து தாமிரபரணி நதியில் அடுத்த 3 நாள்களுக்கு பொதுமக்கள் குளிக்க, வேடிக்கைப் பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் வர போலீசார் தடை விதித்துள்ளனர்.

தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள 17 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ள நிலையில்; கேரளாவில் 8 தேசிய பேரிடர் மீட்பு குழுவும், புதுச்சேரியில் 1 குழுவும் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு குழு தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் 13 நிவாரண முகாம்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. கடலோர கிராமங்களுக்கு தனியாக ஏழு சிறப்பு முகாம்களும் தயார் நிலையில் உள்ளது.

You'r reading புரேவி புயல்... தாமிரபரணி நதியில் குளிக்க, வேடிக்கை பார்க்க தடை! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை