பதட்டமான சூழல் - ரஜினிக்கான மாநாட்டை கைவிடுகிறார் தமிழருவி மணியன்

தமிழகம் முழுவதும் ஒரு பதட்டமான சூழல் நிகழ்வதால் கோவையில் காந்திய மக்கள் இயக்கம் மே.20 அன்று நடத்தவிருக்கும் மாநாடு கைவிடப்படுகிறது என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

Apr 4, 2018, 21:25 PM IST

தமிழகம் முழுவதும் ஒரு பதட்டமான சூழல் நிகழ்வதால் கோவையில் காந்திய மக்கள் இயக்கம் மே.20 அன்று நடத்தவிருக்கும் மாநாடு கைவிடப்படுகிறது என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எதிராக இழைத்திருக்கும் மிக மோசமான துரோகத்தை எதிர்த்து ஒட்டு மொத்த தமிழகமும் ஒன்றாகக் கூடிக் குரல் கொடுக்க வேண்டிய நிலையில், அதிமுக ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதும், திமுக தனியாக வரும் 5ஆம் தேதி கடையடைப்பு நடத்துவதும், பாமக 11ந் தேதி கடையடைப்புக்குத் தனியாக அழைப்பு விடுத்திருப்பதும், தேமுதிகவும் தமாகாவும் திருவாரூரிலும், திருச்சியிலும் தனித்தனியாகப் போராட்டங்களில் ஈடுபடுவதும், பிளவு பட்டிருக்கும் வணிகர் சங்கங்கள் கடையடைப்புக்கு நாள் குறிப்பதும் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்தும் விவேகமற்ற செயலே அன்றி வேறில்லை.

தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் கூட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே மேடையில் ஒரே குரலாக மத்திய அரசுக்கு எதிரான அழுத்தத்தை உருவாக்கத் தயாராக இல்லை என்பது ஆழ்ந்த வருத்தத்திற்குரியது. எந்தப் பிரச்சனையிலும் அவரவர் கட்சியின் எதிர்கால நலனை முன்னிறுத்தியே செயற்படும் மிக மோசமான சுயநலம் சார்ந்த அணுகுமுறையிலிருந்து நம் அரசியல்வாதிகள் எள்ளளவும் விடுபடுவதாக இல்லை.

உண்மையில் காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கம் இருந்தால் காவிரி டெல்டா விவசாயிகளை முன்னிறுத்தி அவர்களுக்குப் பின்னால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அடையாளத்தைத் துறந்து ஒன்றுபட்டு போர்க்குரல் கொடுக்க முன் வர வேண்டும். எந்த அமைப்பும் தனிதனியாகப் போராடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.காவிரிப் பிரச்சனைக்கு யார் காரணம் என்று அதிமுகவும், திமுகவும் அரசியல் காழ்ப்புணர்வுடன் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை வீசிக் கொண்டிருக்கும் ஆரோக்கியமற்ற அரசியல் அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கர்நாடகத்தின் ஆணவப் போக்கிற்கு எதிராகப் போராடும் நாம் பொதுப் பிரச்சனையில் எப்படி கட்சி வேலிகளைக் கடந்து மனமாச்சரியங்களை மறந்து ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்பதை அவர்களிடம் முதலில் பாடமாகக் கற்க வேண்டும். கடலில் கலக்கும் ஆறுகளனைத்தும் தங்கள் அடையாளத்தைத் துறந்து, தமிழினம் என்ற ஒரே அடையாளத்துடன் எட்டு கோடி மக்களும் ஒன்றாகக் குரல் கொடுப்பதன் மூலமே எந்தப் பிரச்சனைக்கும் நாம் உண்மையான, நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.

காவிரிப் பிரச்சனை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ ஆய்வகத்திற்கு எதிரான போராட்டம் என்று தமிழகம் முழுவதும் ஒரு பதட்டமான சூழல் நிகழ்வதால் கோவையில் காந்திய மக்கள் இயக்கம் மே.20 அன்று நடத்தவிருக்கும் மாநாடு கைவிடப்படுகிறது. மாநாட்டை நடத்துவதற்காக மாநிலம் முழுவதும் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்ட நிதி, வழங்கியவர்களிடமே திரும்பத் தரப்பட்டு விடும்” என்று அறிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பதட்டமான சூழல் - ரஜினிக்கான மாநாட்டை கைவிடுகிறார் தமிழருவி மணியன் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை