சென்னையில் இருந்து மும்பை நோக்கி, கடந்த அக்டோபர் 21-ம் தேதி கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட, ரூபாய் 15 கோடி மதிப்புள்ள 13,900 செல்போன்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மேலுமலை பகுதியில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் மூலம், இதில் ஆறரைக் கோடி ரூபாய் ஹவாலா பணம் பரிமாற்றம் நடந்து உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சூளகிரி அருகே 13,900 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் திரிபுராவில் இருந்து பங்களாதேஷுக்கு கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த செல்போன்கள் விற்பனை செய்யப்பட்டதில் ஆறரை கோடி ரூபாய் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. , இந்த கொள்ளை சம்பவத்துக்குத் துபாயில் வசிக்கும் முகமது அப்பாஸ் என்பவர் மூளையாகச் செயல்பட்டுள்ளார்.ஆந்திரா, மத்தியப் பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் நான்கு இடங்களில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், தமிழக போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, கொள்ளை நிகழ்ந்த ஒரே மாதத்தில் 10 பேரைக் கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.