வெள்ள சேதங்களை பார்வையிட வந்த முதல்வர் வேளாங்கண்ணி மாதா கோவில் நாகூர் ஆண்டவர் தர்கா என இரு மத நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். தேர்தலுக்கான ஸ்டண்ட் என்று சிலர் இதை வர்ணித்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் தொடர்கிறார் முதல்வர் பழனிசாமி. நாகை மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. நேற்று இரவு வேளாங்கண்ணிக்கு வந்த அவர், இன்று காலை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தரிசனம் செய்தார், பின்னர் நாகூர் புறப்பட்டார். அங்கு புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவில் தொழுகையிலும் ஈடுபட்டார்.
நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கருங்கண்ணி என்னுமிடத்தில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை பார்வையிட்டார். கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10ஆயிரம் ஹெட்டேரில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனை அவர் பார்வையிட்டபோது விவசாயிகள் நெற்பயிரை எடுத்து வந்து முதலமைச்சரிடம் காட்டினர். வேதாரண்யம் அருகே உள்ள பழங்கள்ளிமேடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 364 பேருக்கு அரிசி, பருப்பு , வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் திருவாரூர் மாவட்டம், மற்றும் மயிலாடுதுறை பகுதிகளுக்கு சென்று மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பழங்கள்ளிமேடு பகுதியில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் 160 குடும்பங்களைச் சேர்ந்த 360 பேர் அரசு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமிற்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டரிந்தார். பின்பு முகாமில் உள்ள 15 குடும்பத்தினருக்கு அரிசி, பருட்பு,புடவை, வேஷ்டி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அதன் பின் முகாமில் தங்கி இருக்கும் நபர்களுக்கு உணவு சமைக்கும் கூடத்திற்கு சென்றார்.
சமைக்கப்பட்ட உணவு பொருட்களின் தரத்தை கேட்டறிந்தார். சாம்பாரில் என்னென்ன காய்கறி சேர்த்து எங்கள் என்ன கறி சமைத்து இருக்கிறீர்கள்? என்று அங்குள்ளவர்களிடம் கேட்டுக்கொண்டே வந்தார் முட்டைக்கோஸ் பொரியல் வைத்திருக்கிறோம் என்று சமையல்காரர் சொல்ல அதை கொஞ்சம் கொடுங்க.. என்றவர் அதை வாங்கி சுவைத்துப் பார்த்தார். நல்லா இருக்கு .. காய்கறிகள் நிறைய சேர்த்து நல்ல தரமான உணவாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.