டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.புதுடெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த வளாகம் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இதனால், ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக, ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் உள்படப் பல காரணங்களைக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தாலும் பூமி பூஜை நடத்த அனுமதித்தது.
இந்நிலையில் இன்று காலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கான பூமி பூஜை யாகத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர், அவர் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சர்வமதப் பிரார்த்தனையும் நடைபெற்றது.
ரூ.971 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் நாடாளுமன்றக் கட்டிடப் பணி வரும் 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. அந்த ஆண்டில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்குள் புதிய நாடாளுமன்ற வளாகம் அமைக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடத்தைக் கட்டும் பணியை டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. பிரமாண்ட அரசியலமைப்புச் சட்ட அரங்கம், நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கான அறைகள், உறுப்பினர்கள் ஓய்வு அறை, நூலகம் உள்பட பல்வேறு வசதிகளும் இந்த கட்டிடத்தில் இடம்பெற உள்ளது.
மேலும், மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் அமைக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேர் அமரும் வகையில் போதிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.