சென்னை மெரினா கடற்கரை உள்பட திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய முக்கிய பேருந்து நிலையங்களில் வைபை வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் முக்கிய இடங்களில் வைபை செய்துத்தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், நான்கு முக்கிய நகரங்களில் வைபை வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் வைபை என்றும் கம்பியில்லா இணைய வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வைபை மண்டலம்’ ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக ரூ.8 கோடியே 50 லட்சம் செலவில் 50 இடங்களில் அம்மா ‘வைபை’ மண்டலங்கள் அமைக்க தமிழ்நாடு அரசால் 16.8.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், சேலம் மத்திய பேருந்து நிலையம், திருச்சி மத்திய பேருந்து நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா ‘வைபை’ மண்டலங்களை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
அம்மா வைபை மண்டலங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் வைபை வசதி இலவசமாக வழங்கப்படும். அதன் பின்னர், பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணைய சேவை வசதிக்கு மணிக்கு ரூ.10 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.