கர்நாடகத்திலிருந்து காவிரி தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா என்பவரை புதிய துணை வேந்தராக நியமிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் பல்வேறு கல்வியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக பலர் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழக மக்களும், விவசாயிகளும் போராடி வருகின்ற நிலையில், கர்நாடகாவை சேர்ந்த ஒருவரையே துணை வேந்தராக நியமிக்கப்பட்டிடுப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையே கமல்ஹாசனும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கர்நாடகத்திலிருந்து காவிரி தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய -மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணிவிட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?” என்று தெரிவித்துள்ளார்.