அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர வேண்டுமானால், தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. பாமக 7, பாஜக 5, தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிட்டன. அப்போதே தேமுதிகவுக்குக் குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால், அக்கட்சியினர் கடைசி வரை கடும் அதிருப்தியிலிருந்தனர். எனினும், தற்போது வரை அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்து வருகிறது.
இந்நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று(டிச.13) நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் சுதீஷ், மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சியின் 67 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில், சட்டசபைத் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது.
அதனால், தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் நமது கட்சியினர் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும். மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுமா? கூட்டணி சேருமா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் கேப்டன்(விஜயகாந்த்), பொதுக் குழுவில் பதில் அளிப்பார். ஜனவரியில் நமது கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. அந்த கூட்டத்தில் தேர்தல் நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார். இப்போது வயது முதிர்வு மற்றும் உடல் சோர்வு காரணமாக கேப்டன் முன்புபோல தீவிரமாக பணியாற்றவில்லை.
ஆனால், நிச்சயமாகத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக பணியாற்றுவார்.கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தேர்தலில் நாம் மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றோம். வரும் தேர்தலிலும் அதே அளவு தொகுதிகளைத் தரும் கட்சிகளுடன்தான் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும். இல்லாவிட்டால் தே.மு.தி.க. தனித்து களமிறங்கும் என்று கூறினார்.