காவிரி பிரச்சனை முடிவுக்கு வரும் வரை, இந்த கிரிக்கெட் என்ற தறிகெட்ட பந்தய ஆட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகிடும் அவலம், கர்நாடகாவின் முரண்டு, பிடிவாதத்தாலும், மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாலும் தமிழ்நாடே போராட்டக் களமாக மாறி விட்டது.
இங்குள்ள ஒரு மாநில அரசு ஏனோ தானோ, ஒப்புக்கு அழுதவன் கதையாக, கபட நாடகம் ஆடுகிறது! மத்திய அரசுக்கு போதிய அரசியல் அழுத்தம் கொடுத்து, தமிழ்நாட்டு மாநில உரிமைகளை - அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாக்கவும் தவறிவிட்ட நிலையில், மக்கள் ஆங்காங்கே, தாங்களே குமுறி கொந்தளித்து எழுந்து போராட்டக் களத்தில் குதித்திடும் இவ்வேளையில், ஐபிஎல் கிரிக்கெட் நடத்திட முன்வருவது பட்டினியால் வாடும் விவசாயிகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பற்றிக் கவலைப்படாத ஒரு போக்காகும்.
இதனைத் தடுத்து நிறுத்தி, இப்பிரச்சனை முடிவுக்கு வரும் வரை, இந்த கிரிக்கெட் என்ற தறிகெட்ட பந்தய ஆட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும். கும்பி எரியும்போது கோலாகல கிரிக்கெட் ஒரு கேடா?” என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.