அரியலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழக தலைவர் எல்முருகன், ``யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும். தற்போதைய கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். ஆனால் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என மத்திய பாஜக தலைமைதான் முடிவெடுக்கும்” என்றார். இது அதிமுக கூட்டணியில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் கூட்டணி யார் தலைமையில் என்பது தொடர்பான சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையே, எல்.முருகன் பேச்சுக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ``கூட்டணி தொடரும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. எல்.முருகன் கருத்து ஏற்கத்தக்கதல்ல. முதல்வர் வேட்பாளரை அதிமுக ஏற்கனவே அறிவித்து விட்டது'' என்றார். இதேபோல் பேசிய அன்வர் ராஜா, ``எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்றால், எங்கள் முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்க வேண்டும். இல்லை என்றால் பாஜக தனித்து போட்டியிட வேண்டி வரும்" எனக் கூறி இருக்கிறார். இது அதிமுக கூட்டணியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.