கடந்த 2002ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா இருந்த போது ரூ.43 கோடிக்கு தவறான கணக்குகள் காட்டப்பட்டதாக கூறி, அவர் உள்பட அப்போதைய சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையினரும் அப்துல்லா மீது வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். ஜம்முவில் ராஜ்பாக் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது. இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட ஏஜென்சிகளை கொண்டு, பரூக் அப்துல்லா மீது பழி வாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதன்மூலம், காஷ்மீர் மக்களின் குரலை ஒடுக்கலாம் என்று மத்திய அரசு தவறாக நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, பரூக் அப்துல்லா உள்ளிட்டவர்களின் ரூ.11.86 கோடி மதிப்பிலான சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கி அதிரடி காட்டியிருக்கிறது. ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் உள்ள 2 குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு வணிக கட்டிடம், 3 மனைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பு மட்டுமே ரூ.11.86 கோடி. ஆனால் சந்தை மதிப்பு ரூ..60 கோடி முதல் ரூ.70 கோடி வரையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.