பா.ஜ.க. மாநில துணை தலைவர் அண்ணாமலை, அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பேசியதை வேக, வேகமாக மறுத்துள்ளார் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து கோவை மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்து வருகிறார். கருமத்தம்பட்டியில் அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தைத் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு 2000 ரூபாயாகக் கொடுப்பதுதான் தமிழக அரசியல். 2000 ரூபாய்க்காக மக்கள் 5 வருடத்தை அடகு வைத்து விடக்கூடாது.
பா.ஜ.கவிற்கு மக்கள் வாக்களிக்காவிட்டால் தலைக்கு மேல் சீரியல் லைட் வைத்திருக்கும் தலைவர்கள், காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள்தான் உங்களுக்கு அரசியல்வாதிகளாக வாய்ப்பார்கள் என்று கூறியுள்ளார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி, கூட்டணிக் கட்சியான அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குக் கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் செம்மலை கூறுகையில், அரசியலை நன்கு தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும்.
அரசியலுக்கு வந்து கொஞ்ச நாளிலேயே இப்படியெல்லாம் அவதூறு கருத்துகளைச் சொல்வது நல்லதல்ல. அவர் பேசியதை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஏழை மக்கள் சந்தோஷமாகப் பொங்கலைக் கொண்டாடுவதற்காக இந்தப் பணம் கொடுக்கப்படுகிறது. இதை ஓட்டுக்குக் கொடுப்பதாக அவர் கூறுவது அவரது அறியாமையைக் காட்டுகிறது. அரசாங்க கஜானாவில் இருந்து கொடுக்கப்படும் பணம், கொள்ளையடித்த பணமா? பா.ஜ.க. தலைமை அவரைக் கண்டிக்க வேண்டும் என்று கூறினார்.கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படவே அண்ணாமலை அவசர, அவசரமாக மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் அப்படிச் சொல்லவில்லை. பொங்கலுக்குத் தமிழக அரசு பணம் கொடுப்பதை ஆதரிக்கிறேன். ஓட்டுக்கு 2,000 ரூபாய் அளிக்கப்படுவதைத்தான் விமர்சித்தேன் என்று தெரிவித்தார்.
தனது ட்விட்டர் பக்கத்திலும் இதனை விளக்கியுள்ளார். அதில், சில ஊடகங்கள், பொங்கலுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாகத் தவறாகச் சித்தரித்துக் கூற முயற்சிக்கிறார்கள் என்று ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார். ஏற்கனவே பா.ஜ.க- அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் என்பதை பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார். அதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு வரவே அவரும் இதே போல் ஒரு விளக்கம் கொடுத்துச் சமாளித்தார்.