அதிமுக அமைச்சர்கள் மீது கோடிகளில் ஊழல் புகார்.. கவர்னரிடம் ஸ்டாலின் அளித்தார்..

by எஸ். எம். கணபதி, Dec 22, 2020, 13:41 PM IST

முதலமைச்சர் உள்பட அதிமுக அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் புகார்களின் பட்டியலை கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். ஆதாரங்களுடன் 2வது பட்டியலை விரைவில் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச22) காலை 10.30 மணியளவில் ராஜ்பவனுக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அவருடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோரும் கவர்னரை சந்தித்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை மீது 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை ஸ்டாலின், கவர்னரிடம் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ள ஊழல் பட்டியலின் சுருக்கம் வருமாறு: முதலமைச்சர் பழனிச்சாமி தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6133 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்ததில் அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது; முதற்கட்டமாக 200.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்த ஊழல்கள். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது காக்னிஷன்ட் கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த ஊழல் புகார். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து- அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து 875 கோடி ஊழல் புகார். மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி, தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார்.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரசி மற்றும் வாங்கிய அரசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்கா 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது; புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள். வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது 1950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார். மீன்வளத்துறை அமைச்சர் திரு டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல். இவ்வாறு புகார்களின் சுருக்கத்தை திமுக வெளியிட்டிருக்கிறது. முதற்கட்டமாக முதலமைச்சர் பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது தற்போது ஊழல் புகார் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

கவர்னரை சந்தித்த பின்பு, மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சரியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்பதால், தற்போது அவரிடம் 97 பக்க புகார் பட்டியலை ஆதாரங்களுடன் சமர்ப்பித்திருக்கிறோம். அதிமுக அமைச்சர்கள் மீது இன்னும் ஏராளமான ஊழல் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆதாரங்களை தேடிக் கொண்டிருக்கிறோம். அவை கிடைத்ததும் 2ம் பட்டியலை கவர்னரிடம் கொடுப்போம். ஊழல் புகார்களை விசாரிக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

You'r reading அதிமுக அமைச்சர்கள் மீது கோடிகளில் ஊழல் புகார்.. கவர்னரிடம் ஸ்டாலின் அளித்தார்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை