பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பை அகற்ற விஏஓ, தாசில்தார், போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை, பீ.பீ.குளத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை, பீ.பீ.குளம், நேதாஜி மெயின்ரோடு பகுதியில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டி சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.
மின் இணைப்பு, ஆதார் மற்றும் குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவை அரசால் வழங்கப்பட்டுள்ளது.ஆக்கிரமித்துள்ள இடத்தை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் நோட்டீஸ் கொடுத்துள்ளார். எங்களுக்கு வேறு இடம் இல்லை. நாங்கள் அனைவரும் தினக்கூலிகள். வெளியேற்றினால் கடுமையாகப் பாதிக்கப்படுவோம். எனவே, எங்களை வெளியேற்றக் கூடாது எனவும், உதவிப் பொறியாளர் நோட்டீசிற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த வேறு சிலரும் இதே போன்ற மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளவர்கள் குடியிருக்கக் குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியில் குடியிருப்போர் நான்கு மாதத்தில் காலி செய்வதாக உறுதி மொழி பத்திரம் கொடுக்க வேண்டும். உத்தரவாதம் அளிக்காதவர்களின் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும்.
ஆக்கிரமிப்பைத் தடுக்க அரசுக்குப் பரிந்துரைக்கும் வகையில் தாலுகா அளவில் கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியர் காவல் மற்றும் பொதுப்பணித்துறையினரைக் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.