அமைச்சர்களின் கார்கள் உள்பட அரசு வாகனங்களில் பம்பர்களை அகற்ற உத்தரவு..

by எஸ். எம். கணபதி, Dec 27, 2020, 11:30 AM IST

அரசு வாகனங்களில் பம்பர் எனப்படும் கிராஸ்பார் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் பெரிய கம்பிகளை கொண்ட பம்பர்கள் பொருத்தப்படுகின்றன. இது மோட்டார் வாகனச் சட்ட விதிகளுக்கு முரணானது என்று அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக போலீசார் இது போன்ற பம்பர்களை பொருத்தியுள்ள வாகனங்களின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். இதையடுத்து, சாமான்யர்களுக்கு மட்டும்தான் விதிமுறைகளா?

அரசு வாகனங்களுக்கு கிடையாதா? என்று கேட்டு, பம்பர் பொருத்தப்பட்ட அரசு வாகனங்களின் படத்தைப் போட்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது,
இதைத் தொடர்ந்து, முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்கள், அரசு துறை செயலாளர்கள், மாவட்டக் கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று சென்னை ஐகோர்ட், அனைத்து வாகனங்களிலும் கிராஸ் பார்(பம்பர்) என்ற கம்பிகளை அகற்ற வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்றுவதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்பாக வி.வி.ஐ.பி.க்கள், வி.ஐ.பி.க்களின் வாகனங்களில் அகற்றியது பற்றி அறிக்கை தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கிராஸ் பார் என்ற பம்பர் கம்பிகளை வாகனங்களில் பொருத்துவது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 52-க்கு முரணாக உள்ளது என்றும், பொருத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும் கூறியிருக்கிறது. பம்பர்கள் போன்ற அங்கீகாரமற்ற பொருட்களை பொருத்துவது, சாலையில் நடந்து போகிறவர்கள் மற்றும் வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்புக்கு கடுமையான பாதகமாக உள்ளது என்று கருதப்படுகிறது. எனவே, மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் வாகனங்களில் இதுபோன்ற அங்கீகாரமற்ற பொருட்கள் அரசு வாகனங்களில் இருந்து அகற்றப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading அமைச்சர்களின் கார்கள் உள்பட அரசு வாகனங்களில் பம்பர்களை அகற்ற உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை