தமிழகத்தில் இது வரை 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டதில் 8 லட்சம் பேர் அந்நோயில் இருந்து மீண்டுள்ளனர். 12,156 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே மூன்று லட்சம் பேருக்கு பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் நோய் அக்டோபர் மாதத்திற்கு பிறகு குறையத் தொடங்கியது. தற்போது தினமும் சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. நேற்று 61 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 867 பேருக்குத்தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தமிழக அரசு நேற்று(ஜன.3) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 867 பேரையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 20,712 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1002 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 429 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 10 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,156 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8127 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். சென்னை(236பேர்), கோவை(69பேர்), மாவட்டங்களில் மட்டும் நேற்று 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதித்திருக்கிறது.
மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. செங்கல்பட்டு(49), காஞ்சிபுரம்(32), சேலம்(46), ஈரோடு(39) பேருக்கு பாதித்துள்ளது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 26,234 பேருக்கும், செங்கல்பட்டில் 50,209 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42,773 பேருக்கும், கோவையில் 52,565 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, ஈரோடு, திருப்பூர் சேலம் மாவட்டங்களில்தான் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்கள் அதிகமாக உள்ளனர். மற்ற மாவட்டங்களில் தினமும் பத்து, பதினைந்து பேருக்குத்தான் தொற்று பரவி வருகிறது.