விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மக்கள் பணியில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் லஞ்சத்தை எதிர்த்துப் பெயர் பெற்ற ஐஏஎஸ் சகாயம் நேற்று முதல் அதிகாரி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இனி அவர் அரசியலில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அடுத்து மக்கள் பணியில் தான் ஈடுபடப் போகிறேன் என்று சகாயம் தெரிவித்துள்ளார்.சகாயம் ஐஏஎஸ். ஒரு காலத்தில் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமான இந்த பெயர் இவரது நேர்மைக்குக் கிடைத்த சான்றாக இருந்தது. ஊழலை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்துக்காகப் பல துறைகளுக்குப் பந்தாடப்பட்டார்.
கடந்த 2001-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவியேற்ற சகாயம் . புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோதுதான் கிரானைட் ஊழலை அம்பலப்படுத்தினார். கடந்த ஆறு ஆண்டுகளாகத் தமிழ்நாடு அறிவியல் நகரத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார்.இன்னும் 3 ஆண்டுகள் கழித்து அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் 57 வயதிலேயே விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பம் கொடுத்திருந்தார். இதையடுத்து தமிழக அரசு நேற்று முதல் அவரை பணியில் இருந்து விடுவித்தது .
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையும் ஆற்றி வந்துள்ளார். இந்த அமைப்பு மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு லஞ்சத்துக்கு எதிரான மறைமுகப் போரை நடத்தி வந்தார். தற்பொழுது தமிழகத்தில் தேர்தல் வரக் கூடிய காலம் என்பதால் இவரது அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.இந்நிலையில் இனி மக்கள் பணி தான் என்று சகாயம் தெரிவித்திருக்கிறார். அது எந்த வகையான பணி? எப்படி இருக்கும்? எப்போது துவங்கும்? என்பதை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்