தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு தூத்துக்குடி பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறி, ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக ஆலை மார்ச் மாதம் 26-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்தி வரும் அ.குமரெட்டியாபுரம் பொதுமக்களை நேற்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி, காமராஜ் கல்லூரி, கோரம்பள்ளம் அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரிகள் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்குள்ள வி.வி.டி சிக்னல் பகுதியில் இருந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அத்துடன், அதிரடிப்படை போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். போலீசார் பாரிகாட் அமைத்திருந்தனர். ஆயினும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தடுப்புகளை தாண்டி உள்ளே சென்றனர். அப்போது, போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.