ஜெயலலிதாவின் வாரிசு என தம்மைக் காட்டிக்கொள்ள டிடிவி தினகரன் முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்க மனு அளித்துள்ளார்.
அதில், “டிடிவி தினகரன் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கொடியை வடிவமைத்துள்ளார். அம்மா என்ற பெயரையும், ஜெயலலிதாவின் படத்தையும் பயன்படுத்தி அவரது வாரிசு என தினகரன் காட்டிக்கொள்ள முயல்கிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தினகரன் அக்கட்சி புகழை நேர்மையற்ற முறையில் பயன்படுத்துகிறார்” என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஜெயலலிதாவின் படத்தை பயன்படுத்த தடை கோரி மனுதாக்கல் செய்ய அனுமதி அளிக்குமாறும், பழனிசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கூடுதல் மனு தாக்கல் செய்ய அனுமதித்து ஜூன் 3 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.