தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்பதில், அதிமுக, திமுக கட்சிகளை போல் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் கோதாவில் இறங்கி விட்டன. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வரும் 14ம் தேதியன்று தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கவும், தமிழ்நாட்டில் சட்டசபைக்குள் நுழைந்து காலூன்றவும் பாஜக துடிக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக ஏதேதோ அரசியல் நகர்வுகளை பாஜக முன்னெடுத்து வருகிறது. எனினும், அக்கட்சி மிகவும் எதிர்பார்த்த ரஜினியின் வருகை ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. ஆனாலும், அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை வாங்கி வெற்றி பெற வேண்டும் என்றும், அதே சமயம் அதிமுகவை பலவீனப்படுத்தி அதன் மூலம் பாஜகவை வளர்க்க வேண்டுமென்றும் திட்டங்களை தீட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் பல்வேறு பாஜக மேலிடத் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவண்ணம் உள்ளனர். தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 14ம் தேதி பொங்கலன்று சென்னைக்கு வருகிறார். மாலை 5 மணியளவில் மதுரவாயல் அருகே பாஜக சார்பில் நடத்தப்படும் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அதன்பின், கலைவாணர் அரங்கில் நடைபெறும் துக்ளக் 51வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசுகிறார். அவரது சென்னை நிகழ்ச்சி நிரலில் முதல்வர், துணை முதல்வர் உள்பட அதிமுகவினர் யாரும் சந்திப்பதாக இடம் பெறவில்லை. ஆனாலும், தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு ஏற்பட்டால், அவர்கள் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவை போல் காங்கிரசும் தமிழ்நாட்டு தேர்தலை கவுரவப் பிரச்னையாக கருதுகிறது.
காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் பெரும் தோல்வியைச் சந்தித்தாலும் தமிழ்நாட்டில் மட்டுமே அக்கட்சி இடம்பெற்ற திமுக கூட்டணி, 39ல் 38 இடங்களை வென்றிருக்கிறது. எனவே, அதே வெற்றியை சட்டசபைத் தேர்தலிலும் தக்க வைத்தால்தான், அகில இந்திய அரசியலில் தமிழ்நாடு மதச்சார்பற்ற எங்கள் பக்கம்தான் என்று பேசுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இதனால், தற்போது காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் தேர்தலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்துள்ளதுடன், சில போராட்டங்களையும் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வரும் 14ம் தேதி பொங்கலன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவர் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வை பார்வையிடுகிறார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி விட்டு செல்கிறார். மேலும், இம்மாத இறுதியில் தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார்.