சன் நியூஸ் டி.வி. மீது விஜயபாஸ்கர் ஆத்திரம்.. ஸ்டாலின் கண்டனம்..

by எஸ். எம். கணபதி, Jan 12, 2021, 15:15 PM IST

சன் நியூஸ் சேனலின் மைக்கை தூக்கி வீசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால், பல்வேறு பிரச்னைகளில் அதன் மீது மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர்களின் சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிமுகவை விட பல ஆயிரம் வாக்குகள் அதிகமாக வாங்கியிருந்தனர். இந்நிலையில், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதிகளில் மக்களை எப்படியாவது தாஜா செய்து சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று முனைப்பு காட்டி வருகின்றனர்.

குட்கா ஊழல் உள்பட பல குற்றச்சாட்டுகளில் சிக்கிய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 86,248 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தது. அதனால், தனது தொகுதி மக்களை குளிர்விக்க விஜயபாஸ்கர் பல கோடிகளை செலவிட்டு வருகிறார். தற்போது விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர் என்ற பெயரில் சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச பொருட்களை அளித்துள்ளார். பித்தனை பானை, கரண்டி, தட்டு, அரிசி, வெல்லம் உள்ளிட்டவற்றை அளித்துள்ளார். இதை அதிமுகவினர் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர். இதை சன் நியூஸ் தொலைக்காட்சி, செய்தியாக வெளியிட்டது. இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று(ஜன.12) அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

பேட்டி தொடங்கும் முன்பாக அவர் சன் டிவி லோகோ இருந்த மைக்கை தூக்கி வீசினார். சன் டி.வி.க்கு பேட்டி தர மாட்டேன் என்று அவரை வெளியேறச் சொன்னார். தற்போது இந்த காட்சி வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பத்திரிகையாளர் சந்திப்பின் போது சன் டி.வி. மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அதிமுக அமைச்சரவையையே மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது. ஊடகங்களை மிரட்டுவதும், மமதையும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்; மக்களின் எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும்!
இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

You'r reading சன் நியூஸ் டி.வி. மீது விஜயபாஸ்கர் ஆத்திரம்.. ஸ்டாலின் கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை