நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு முறைகேடாக சான்று கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

by Balaji, Jan 12, 2021, 19:56 PM IST

நெல்லையில் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக தடையில்லா சான்று வழங்கியவர்கள், மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்கு பதிவு விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கை முறையாக விசாரித்து 5 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. முறையாக ஆய்வு செய்யாமல் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்தால் கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்று ஏற்பட வாய்ப்புள்ளது இது போன்ற முறைகேடுகளை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் - நீதிபதி உத்தரவு. அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்டப்பாதுகாப்பு கழக தலைவர் ஐ.மனோகரன் ஜெயகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அடிப்படை வசதிகள் இல்லாத பல்வேறு பள்ளிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் ஏ.கருப்பசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஸ்ரீதேவி ஆகியோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: நெல்லையில் அடிப்படை வசதியில்லாத ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி செயல்படும் கட்டிடம் குடியிருப்புக்கான கட்டி வரைபட அனுமதி அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் பொது கட்டிடம் என சான்று வழங்கி பள்ளி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. தீயணைப்புத்துறை தடையில்லா சான்று வழங்குவதற்கு முன்பு அந்த பள்ளியை அத்துறை சார்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஆய்வு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

அவர் எவ்வாறு ஆய்வு செய்தார் என்பது தெரியவில்லை. இப்பள்ளியில் தீ விபத்து நடைபெற்றால் கும்பகோணம் போல் பேரிழப்பு ஏற்படும். இதுபோன்ற பள்ளிகளை செயல்பட அனுமதிப்பது குற்றங்களை விளைவிப்பதாகும். இதுபோன்ற தவறுகளை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இதற்கு காரணமான கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, தடையில்லா சான்று வழங்கியவர்களையும் விசாரிக்க வேண்டும். எனவே நெல்லையில் செயல்படும் தனியார் பள்ளிக்கு முறைகேடாக பொது கட்டிட உரிமம் வழங்கியவர்கள், தடையில்லா சான்றிதழ் வழங்கியவர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை முறையாக விசாரித்து 5 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவை அனைத்து துறைகளின் தலைவர்களுக்கும் சிறப்பு அரசு வழக்கறிஞர் அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

You'r reading நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு முறைகேடாக சான்று கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை