பூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...

by Balaji, Jan 14, 2021, 20:25 PM IST

தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவின் இப்போதைய நிலை குறித்து முகநூலில் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் அவர். அதிமுகவில் அவரது கருத்துக்கள் பூகம்பத்தைக் கிளப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதிவு:ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது மனம் திறக்க ஆரம்பித்திருக்கிறார். என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் விசுவாசம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. இந்த ஆட்சி அம்மாவின் ஆட்சி.

இதில் உரிமை கொண்டாடுவதில் யாருக்கும் பெருமையுமில்லை. அம்மா அவர்கள் கஷ்டப்பட்டுப் பெற்றுத் தந்த ஆட்சிக்கு என்னால் ஒரு களங்கம் வரக்கூடாது என்பதால் மௌனம் காத்தேன். தை பிறந்து விட்டது. தேர்தலும் நெருங்கிவிட்டது. சிலரின் பேச்சும், விமர்சனங்களும் என் மனதைப் பெரிதும் பாதித்து வந்தன. அதற்காகவே இந்த மனக்குமுறல்.அம்மா அவர்கள் ஆசையோடு எனக்கு வாங்கித் தந்த காரை நிறுத்திவிட்டார்கள். ஏன் நிறுத்தினீர்கள் என்று இன்றுவரை கேட்டிருப்பேனா?

கட்சியின் சொத்துக்களான அறக்கட்டளைகள் மூன்றிலும் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு நான் மட்டுமே நிர்வாகி. நான் என்றாவது இதைப் பற்றி பேசி இருப்பேனா? அதை மாற்றிக் கொடுத்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்றுச் சொன்னார்கள். இதைப் பற்றி என்றாவது வெளியில் சொல்லி இருப்பேனா? அறக்கட்டளை என்னுடையது என்று சொந்தம் கொண்டாடினேனா? தொண்டர்களின் உணர்வுகளைப் பதிவிடும் போது தலைவர்கள் கோபமாக இருக்கிறார்கள். எதாவது செய்து விடப் போகிறார்கள். வெளியில் செல்லும் போது கவனமாக செல்லுங்கள் என்றார்கள். இதுபற்றி நான் யாரிடமாவது விவாதித்தது உண்டா? தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் நீண்ட நாட்களாகப் பேட்டி கேட்டு வருகிறார்கள். என் பேட்டி கட்சிக்கோ, மற்றவர்களுக்கோ எந்த விதத்திலும் சங்கடத்தை தந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவிர்த்து வந்தேன்.எல்லாவற்றையும் அவன் பெயரில் மாற்றுங்கள். அவன் ஒருவனே என் நம்பிக்கைக்குரியவன் என்று அம்மா அவர்கள் சொன்னதை இதுவரை பெருமையாக சொல்லி இருப்பேனா? போயஸ் கார்டன் வீட்டின் சொத்துவரிக்கான படிவத்தில் அம்மா அவர்களுக்கான இடத்தில் என்னை கையெழுத்திட சொன்ன நம்பிக்கை பெற்றவன் நான். அதுவே என் ஆனந்தம். அதுவே என் வெற்றி. அதுவே எனக்குப் போதும்.

மூன்று முறை கழக உறுப்பினர் உரிமை சீட்டிற்கு விண்ணப்பித்த போது என்னுடைய படிவத்தை மட்டும் வாங்க மறுத்தீர்களே, அதைத் தட்டிக் கேட்டேனா? மற்றவர்களுக்கு தெரிவித்தேனா?உங்களுக்கு தராமல் என் பெயரில் கட்சியின் அறக்கட்டளைகளை அம்மா தந்திருப்பதால் நான் தான் அம்மாவின் வாரிசு என்று அறிவித்தேனா? யாருக்கும் என்னால் எந்த சங்கடமும் வரக்கூடாது என்பதற்காக கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருக்கும் என்னை பார்த்து ஏளனம் பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது. ஏதோ ஒரு வகையில் என்னிடம் உதவி பெற்றிருப்பீர்கள். நமக்கு உதவியவன் இவன் என்று என்றாவது அழைத்து ஆறுதல் சொல்லி இருப்பீர்களா? இன்னுமா புரியவில்லை என் விசுவாசம். இதற்குமேல் எப்படி கழகத்திற்கு விசுவாசமாக செயல்படுவது என்று எனக்கும் புரியவில்லை. சொல்லித்தாருங்கள்.

அம்மாவே இல்லை என்று ஆன பிறகு சொத்துக்கள் எதற்கு? சொத்திலும் ஆசை இல்லை. கட்சியிலும் ஆசை இல்லை. தலைமையில் இருப்பவர் கட்சியை வலிமையாக நடத்த வேண்டும். அதுவே என் ஆசை, வேண்டுதல். தலைவராக யாரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு உண்டு.நீங்கள் நலமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு, யாரிடமும் செல்லாமல் இன்று நிற்கதியாய் நிற்கும் என்னை நிம்மதியாக வாழவிடுங்கள். ஒற்றுமையாய் இருங்கள். கழகத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். இதுவே நீங்கள் எனக்கு செய்யும் மாபெரும் உதவி. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

அம்மாவின் நம்பிக்கை பெற்றதே இந்த ஜென்மத்தில் நான் பெறவெண்டியதை பெற்ற திருப்தி. கடவுளான அம்மாவிற்கு தெரியும் என் விசுவாசம். இவ்வாறு பூங்குன்றன் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading பூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்... Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை