காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஈரோடு மாவட்டத்தில் பொம்மை வியாபாரி தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
ஈரோட்டை அடுத்துள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வசித்து வந்தவர் தர்மலிங்கம் (25). இவரது தந்தை பாலசுப்பிரமணியம். தர்மலிங்கம் 3 வயது இருக்கும் போதே அடுத்தடுத்து தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதால் தனது பாட்டி ரத்தினம்மாள் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
8 ஆம் வகுப்பு வரை படித்துள்ள தர்மலிங்கம் அதன் பிறகு கோயில் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் வியாபாரம் செய்து வந்தார். திருமணம் செய்து கொள்ளாத தர்மலிங்கம் கடந்த 3 மாதங்களாக சரி வர வியாபாரத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் புதனன்று இரவு வீட்டில் இருந்த தர்மலிங்கம் நள்ளிரவு வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் 3 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து கேனில் பெட்ரோல் பிடித்துக்கொண்டு தனது உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அப்போது, தர்மலிங்கத்தின் அலறல் சத்தம் கேட்ட அருகில் வசிப்பவர்கள் எழுந்து பார்த்த போது தீயில் எரிந்த நிலையில் தர்மலிங்கம் தரையில் கிடந்துள்ளார். பின்னர், தீயை அணைத்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
உடல் முழுவதும் தீக்காயங்கள் அதிகம் இருந்ததால், வியாழனன்று காலை 8.45 மணியளவில் தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது வீட்டின் காம்பவுண்ட் சுவரில் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில், “மத்திய அரசே, கர்நாடக அரசேகாவிரி நீர் தமிழகத்தின் உயிர் நீர். எடப்பாடி பழனிச்சாமியே நீங்கள் தமிழனா இல்லையா. தமிழ்நாட்டு மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழகம் வருகின்ற நரேந்திரமோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது. பா.தர்மலிங்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.