தண்ணீர் பிரச்சனை நிலவி வருவதால், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பில் கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம், மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்தது.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்களை அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடந்தி வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டி காரணமாக, காவிரிக்காக நடைபெற்று வரும் போராட்டம் திசை திருப்பக்கூடும் எனக் கூறி சில அரசியல் கட்சிகள் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டி காண சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து மீதம் இருக்கும் 6 சென்னை போட்டிகள் பல மாநிலங்கள் கவனத்தில் கொண்டு வரப்பட்டு, கடைசியாக புனேவிற்கு போட்டிகள் மாற்றப்பட்டது.
இந்நிலையில் தண்ணீர்ப் பிரச்சினையால் மைதானம் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு கடுமையான தண்ணீர் பிரச்சனை நிலவி வருவதால், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
போட்டி நடக்கும் சமயங்களில் மைதானத்தை பராமரிக்க நிறைய தண்ணீர் செலவு செய்ய வேண்டி இருக்கும். இதனால் ஐபிஎல் போட்டிகளை புனேவில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்டிரா அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இது குறித்து, மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புனேவிலும் விளையாடுவது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.