துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதித்துறையை இழிவுபடுத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவருக்கு வேறு முக்கியப் பணிகள் இருந்ததால், அவருக்குப் பதிலாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். இந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசும் போது, அதிமுக, திமுக கட்சிகளை ஊழல்கட்சிகள் என்று விமர்சித்தார். திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அதற்காக சசிகலாவை சேர்த்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
அத்துடன், சாக்கடை ஜலம் என்று சசிகலாவை ஒப்புமைப்படுத்தி பேசினார். மேலும், நீதிபதிகள் எல்லாம் அரசியல்வாதிகளின் கையை, காலைப் பிடித்து வந்தவர்கள் என்றும் விமர்சனம் செய்தார். இந்நிலையில், வழக்கறிஞர் சார்லஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கில் வாதாடும் போது, நீதிபதிகளிடம் குருமூர்த்தியின் விமர்சனத்தைக் குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். குருமூர்த்தி நீதித்துறையை இழிவுபடுத்தி விட்டதாக அவர் கூறினார். இதை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் பரிசீலிப்பதாக தெரிவித்தனர். இதனால், குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.