Tuesday, Aug 3, 2021

ரஜினி தரப்பு ஆதரவுடன் புதுக்கட்சி?

by Balaji Jan 28, 2021, 18:58 PM IST

என்னை மன்னித்து விடுங்கள்...என் உடல்நிலை இடம் தரவில்லை.. என்னால் மற்றவர்களுக்கு சங்கடம் வரக் கூடாது என்றெல்லாம் உருக்கமாக கடிதம் எழுதி.. இனி அரசியலே வேண்டாம் என்று முழுக்கு போட்டிருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ரஜினிகாந்த் வேண்டுமானால் கட்சி ஆரம்பிக்காமல் போகலாம். ஆனால் அவர் சொன்ன சொல் வேத மந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்திற்கு அது மிகவும் அவசியம். எனவே ஒரு புதிய கட்சியை மக்களுக்காக உருவாக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார் ரஜினியின் ஆலோசகராக இருந்த அர்ஜுன் மூர்த்தி. இதற்கு லதா ரஜினிகாந்தின் பக்க பலமும் இருக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்.

அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி ஒதுங்கி விட்டாலும் அவரது ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை பல இடங்களில் அவருக்கு அவரை அரசியலுக்கு வருமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர் இதைக்கண்ட ரஜினி என்னைச் சங்கடப்படுத்தாதீர்கள் என்று தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார். ஆனால், சில மாவட்டங்களில், தலைவர் வரவேண்டாம் அவரது வீட்டம்மாவை தலைமையேற்க சொல்லுங்கள் என்று குரல்கள் எழுந்தன.அதன் தொடர்ச்சியாக, லதா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார் என்று மன்றத்தினர் சிலரே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார் அர்ஜுனமுர்த்தி. பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவில் நிர்வாகியாக இருந்து, ரஜினி கட்சியின்(?) தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர். ரஜினி அரசியலுக்கு டாட்டா காட்டியதும் , தனிக் கட்சி தொடங்குவது பற்றி திருவாய் மலர்ந்திருக்கிறார். பத்திரிக்கையாளர்களைச் சந்திதிருக்கிறார்.இன்று நம் தமிழகம் முன்நோக்கி செல்லும் காலகட்டத்தில் உள்ளது, அதிக அறிவாற்றலும், பண்பும், அன்பும் மிக்க தமிழ் மக்களும், தமிழ் கலாச்சாரம் ஒருங்கி ணைந்த இந்த பூமி என்று மே வளம் கொழிக்கும் பூமியாக இருந்துள்ளது.

எந்த ஒரு இடர்பாட்டிற்குப்பின்னும், நாம் நம்மை வலிமைப்படுத்தி கொள்ளும் சூழ்நிலை உருவாகும். அச்சூழ்நிலை இச்சமயத்தில் உள்ளது. அதிர்ஷ்டவசமாக தற்சமயம் நம் தமிழகம் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது, இது நமக்கு பெரும் ஆறுதலையும், மாறுதலையும் கொடுக்க வல்லது. என் ஆய்வின் படி பெரிய கட்சிகள், தன் கட்சியின் பலத்தாலும், அதிகாரத்தாலும், பணபலத்தாலும் மக்களை தன் வயப்படுத்த முடியும் என்ற தவறான கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள், ஒருக்காலும் அது உண்மை அல்ல. ஏனென்றால் மக்கள் மனோநிலையில் மிகப்பெரிய மாற்று சிந்தனை கொண்டுள்ளார்கள். 60 ஆண்டுக்கு ஒரு முறை தமிழகம் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்படும் .அக்காலம், அந்த நேரம் அது இந்த நேரம்தான் என்பதனை சரித்திரம் கூறும் இந்த பொன்னான நேரத்தை தவற விடாமல் துணிந்து மக்கள் நலனுக்காகவும், பெண்கள் பாதுகாப்பிற்கும், மதிப்பிற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாகவும் இருக்க நான் விரும்புகிறேன், மேலும் தமிழ்நாட்டில் அதிகமான விழுக்காட்டில் இளைஞர் சக்தி உள்ளது. அவர்களுக்கு என் தொலை நோக்கு பார்வையில் உள்ள மிகப்பெரிய திட்டங்களும், யுக்தி களும் பயனளிக்கும் நம்பிக்கையோடு உள்ளேன். ஆகையால் ஒரு தனி மனிதனாக இருந்து ஒரு தோப்பாக மாறுவதற்கு ஒரு அரசியலமைப்பு தேவையாக உள்ளது. மாற்றுச் சிந்தனையை நாம் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இப்போது வந்திருக்கிறது.

நமது தமிழகத்திற்கு சுதந்திர மூச்சு வேண்டும். அதற்கு நமது அரசியல் மாற்று சிந்தனை வேண்டும் அரசியல் மாற்று என்பது மக்களின் நலனுக்காக மட்டுமே அமைய வேண்டும். அந்த காலம் வந்துவிட்டது என நம்புங்கள். எனது உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு சேவை செய்யவே நான் கடமைப்பட்டுள்ளேன். அது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.சிரித்த முகத்துடன் மக்களை நாம் இனிமேல் பார்க்க போகிறோம். கவலைகள் இல்லாத தமிழகத்தை நிச்சயமாக பார்ப்போம்.மனிதர்களை மனிதராக மதிக்கும் அரசை நாம் சந்திக்கும் காலம் விரைவில்... இதனை உணர்ந்து, இக் காலத்தின் கட்டாயத்தையும் உறுதிப்படுத்தி விரைவில் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக உங்களிடம் சமர்ப்பித்து கொள்கிறேன். உங்களுக்கு அந்த பொன்னான நாள் விரைவில் தெரிவிக்கப்படும்.

இது ஒரு புறமிருக்க ரஜினிகாந்த் இதில் எதற்குமே உடன்படாமல் குடும்பத்தினரிடம் கோபித்துக்கொண்டு பெங்களூர் சென்று விட்டதாகவும் ஒரு வார இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.பார்க்கலாம் ஏற்கனவே தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு ரஜினிகாந்த் முடிந்துவிட்ட நிலையில் அவரது நிலையில் ஆரம்பிக்கப் போகும் புதுக்கட்சி அவரது குடும்ப கட்சியாக இருக்குமா அது பத்தோடு பதினொன்றாக இருக்கப்போகிறது காலம் தான் பதில் சொல்லும்.

You'r reading ரஜினி தரப்பு ஆதரவுடன் புதுக்கட்சி? Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Tamilnadu News

அண்மைய செய்திகள்