மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்வாகிளறும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20-ல் நிதியமைச்சர் தலைமையில் நடக்கும். இந்த ஆண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் தனது கைப்பட தயாரித்து பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் அல்வா கொடுத்திருக்கிறார்.பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்கும் பணி ஆரம்பமாகிவிட்ட நிலையில், இதன் பின்னணி கொஞ்சம் சுவையானது. இனிப்பானதும் கூட எந்தவொரு நல்ல காரியத்தைச் செய்வதற்கு முன்பாகவும் இனிப்பு பரிமாறுவது இந்தியர்களின் கலாசாரம்.
அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா கிண்டும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.பாரம்பரிய அல்வா நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அரசின் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணியின் துவக்கத்தை குறிக்கும்.இதைச் சாப்பிட்டுவிட்டுதான் ஊழியர்கள் ஆவணங்கள் தயாரித்து அச்சடிக்கும் வேலையைத் தொடங்குவார்கள். இதன்பின் இதற்கான வேலையில் ஈடுபடும் ஊழியர்கள் வெளியே போக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
புதுடெல்லியில் இருக்கும் தலைமைச்செயலகத்தில் வடக்கு பிளாக்கில்தான் நிதி அமைச்சகம் இருக்கிறது. அந்த அலுவலகத்தில்தான் பட்ஜெட்டுக்கான வேலைகள் நடக்கும். கிட்டத்தட்ட அந்த அலுவலகம் பிக்பாஸ் அரங்க மாதிரிதான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்கும் வேலைகள் நிறைவடையும் வரை வரை அந்த அலுவலகத்தில் பிக்பாஸ் நிதி அமைச்சர் தான்.பாதுகாப்புக்காக நார்த் பிளாக்கில் ஒரு தனி தொலைபேசி எக்சேஞ்ச் உருவாக்கப்படும். அந்த அலுவலகத்தை சுற்றி உள்ள அருகிலிருக்கும் பகுதிகளின் அத்தனை மொபைல்களும் கண்காணிக்கப்படும்; எந்த நெட்வொர்க்காக இருந்தாலும். மொபைல் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான லேண்ட்லைனும் இந்த தீவிர கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது. உள்ளிருந்து வெளியே அல்லது, வெளியிலிருந்து உள்ளே எதையும் மறைத்து எடுத்துச் செல்ல முடியாது.
வழக்கமாக, பார்லிமென்ட் கட்டிடத்தின் நார்த் கேட் வழியாக யாரும் பாஸ் வாங்கிகொண்டு உள்ளே செல்லலாம். ஆனால் பட்ஜெட் காலங்களில் அப்படி செல்ல முடியாது. பட்ஜெட் வேலையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இதற்கென தனியாக அடையாள அட்டை வழங்கப்படும். உளவுத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கச்சிதமாக நடக்கும். இந்த அலுவலகத்தில் தான் நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும் உரையை குறைந்தபட்சம் மூன்று முறையாவது ஒத்திகை செய்து பார்ப்பார்.
இந்த வளாகத்தின் உள்ளே இருக்கும் உள்ளிருக்கும் பல கணினிகளில் மின்னஞ்சலும் இணையமும் நீக்கப்பட்டுவிடும். மிகவும் அவசிய தேவை என்றால் பயன்படுத்திக் கொள்ள ஓரிரு தொலைபேசிகளும் இணையவசதி கொண்ட கணினிகளும் பயன்படுத்தப்படும். மிக அவசரமான தகவல் என்றால், ஊழியர்கள் குடும்பத்தினருக்கு சொல்ல விரும்பும் தகவலை ஒலிப்பதிவு செய்யலாம். ஆனால், அவர்களுடன் பேச முடியாது.
இந்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு ஒருவேளை உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் டாக்டர் எந்த நேரமும் பணியில் இருப்பார். தேவைப்பட்டால், அருகிலிருக்கும் ராம் மனோஹர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். அப்படி அட்மிட் செய்யப்படுபவர் ஐ அவரது குடும்பத்தினர் உள்பட யாரும் சென்று பார்க்க முடியாது. அங்கேயும் அனுமதி கிடையாது.இந்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் பத்து நாள்கள் அரசின்முழு கட்டுப்பாட்டில்தான் இருப்பார்கள்.இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பட்ஜெட் காகிதத்தில் அச்சிடப்படவில்லை. இந்திய வரலாற்றில் முதல்முறையாக பட்ஜெட் காகிதமற்ற வடிவத்தில் வழங்கப்பட உள்ளது.இப்படித்தான் ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தயாராகிறது ஆனால் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கவில்லை. எத்தனையோ இனிப்பு ரகங்கள் இருக்க இந்த நிகழ்ச்சிக்கு அல்வாவை மட்டும் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்விதான் அது.