மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் சசிகலா, பெங்களூருவில் சில நாட்கள் தங்கவிருக்கிறார். அவர் பிப்.7ம் தேதி சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா கடந்த 27ம் தேதி முறைப்படி விடுதலையாகி விட்டாலும், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று பாதித்திருந்ததாலும், சர்க்கரை அளவு அதிகரித்திருந்ததாலும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பெங்களூரு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் நேற்று(ஜன.30) மாலை வெளியிட்ட அறிக்கையில், சசிகலா நடராஜனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது அந்நோய் அறிகுறி மட்டுமே உள்ளது. மேலும், உடலில் சர்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவு போன்ற அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. அவர் நாளை(ஜன.31) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறியிருந்தனர். இதன்படி, இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். ஆனாலும், கொரோனா பாதிப்பு காரணமாக அவர் சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன் காரணமாக அவர் பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி ஓய்வெடுப்பார். அதன் பிறகு சென்னை திரும்புவார் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அனேகமாக, சசிகலா வரும் 7ம் தேதியன்று சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. அன்று ஓசூர் வழியாக காரில் அவர் வருவார் என்றும் ஓசூர் எல்லையில் தொடங்கி சென்னை வரை பல இடங்களில் அ.ம.மு.க. தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அது பற்றி விரைவில் டி.டி.வி.தினகரன் அறிவிப்பார் என்றும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.