அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒவ்வொரு மாவட்டமாக அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டி வருவது அக்கட்சிக்குள் சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது.பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். அவர் மருத்துவமனையில் அந்த விடுதிக்குச் செல்லும் போது ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடி பறக்க விட்டு, பயணம் செய்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.
அதிமுக கொடியையோ, எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தையோ சசிகலா பயன்படுத்தக் கூடாது என்று கூறினார்.அதற்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பதில் அளிக்கையில், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவே உள்ளார். அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்துகிறார். இதில் ஒன்றும் சர்ச்சை இல்லை. சசிகலா தமிழ்நாட்டுக்குத் திரும்பியதும் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்என்றார். சசிகலா வரும் 7 அல்லது 9ம் தேதி சென்னைக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டமாக அதிமுக நிர்வாகிகள் சிலர், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். சசிகலாவை வரவேற்று முதன் முதலில் போஸ்டர் ஒட்டிய நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணியராஜா, திருச்சி மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை ஆகியோரை கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்கியது.ஆனாலும், திருச்சியில் அதிமுக முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அரசங்குடி சாமிநாதன் ஒட்டிய போஸ்டரில், அம்மாவுக்காக தவவாழ்க்கை வாழ்ந்த அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா அவர்களே வருக வருக என்ற குறிப்பிட்டிருந்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்னராஜாவும் பல இடங்களில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியிருந்தார்.
நெல்லை, திருச்சி, தேனி, தஞ்சை ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து இன்று(பிப்.2) விழுப்புரம் மாவட்டத்திலும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.விழுப்புரத்தில் நகர அம்மா பேரவை செயலாளர் கமருதீன் என்பவர் ஒட்டிய போஸ்டரில், தமிழ்நாட்டின் எதிர்காலமே! துரோகத்தை வென்றெடுக்க வரும் கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ராஜ மாதாவே வருக, வருக! என்று எழுதப்பட்டுள்ளது.இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகள் வரிசையாக போஸ்டர்களை ஒட்டி வருவதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலாவை வரவேற்க ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதிமுகவின் நிர்வாகிகள் படையெடுத்துச் சென்றால், அதிமுக பிளவுபடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதை அதிமுக தலைமை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை. இதற்கிடையே, அதிமுகவுடன் அ.ம.மு.க.வை இணைக்க வேண்டுமென்று அதிமுகவில் ஒரு சில முக்கிய நிர்வாகிகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதனால், அதிமுகவில் தற்போது உச்சக்கட்ட குழப்பம் நீடிக்கிறது.