மூடப்பட்ட ஒரு அறையில் ஆணும், பெண்ணும் இருந்தால் அதை விபச்சாரமாகக் கருத முடியாது. அதை வைத்து ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 23 வருடங்களுக்குப் பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக ஆயுதப்படை போலீசில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சரவண பாபு. இவர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டில் இவரது குடியிருப்பில் அதே பகுதியில் வசித்து வந்த இன்னொரு பெண் காவலர் இருந்ததாகக் கூறி அப்பகுதியினர் இருவரையும் வீட்டில் பூட்டிப் போட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் சரவண பாபு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.இந்த நடவடிக்கையை எதிர்த்து சரவண பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார்.
அதில், தனக்கும் பெண் காவலருக்கும் இடையே எந்த தகாத உறவும் இல்லை என்றும், தன்னுடைய வீட்டில் இருந்த அவரது வீட்டு சாவியை வாங்குவதற்காகவே அவர் வந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் தன்னுடைய வீட்டுக்கு வந்ததும் வீட்டு கதவை யாரோ வெளியில் இருந்து பூட்டி விட்டனர் என்றும் அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், சரவண பாபுவை பணி நீக்கம் செய்த நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் கூறியது: பூட்டப்பட்ட ஒரு அறையில் ஆணும், பெண்ணும் இருந்தால் அதை விபச்சாரமாகக் கருத முடியாது. சமூகத்தில் பல கருத்துக்கள் இருக்கலாம். அதை வைத்து யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கையோ, தண்டனையோ கொடுக்க முடியாது என்று நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.