நாடு முழுவதும் தகுதியில்லாத விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ரூ.237 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 158 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி (பி.எம்.கிஷான் திட்டம்) திட்டத்தின் கீழ் தமிழகத்தில் போலி விவசாயிகளுக்குப் பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகக் கடந்தாண்டு குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, விவசாயத் தொழிலில் ஈடுபடாதவர்கள் 33 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.110 கோடி முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு வருகிறோம் என்றும் தமிழக அரசின் வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்தார்.
தமிழ்நாட்டில் போலி விவசாயிகளுக்குப் பணம் தரப்பட்டது போல் நாடு முழுவதும் தகுதியில்லாத விவசாயிகளுக்கு ரூ.2,327 கோடி தரப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதாவது, வருமான வரி செலுத்தும் விவசாயிகள், மாத ஓய்வூதியம் பெறும் விவசாயிகள் போன்ற பலரும் இத்திட்டத்தில் நிதியுதவி பெறத் தகுதியற்றவர்கள். மற்ற மாநிலங்களில் அவர்களுக்கும் பணம் தரப்பட்டிருக்கிறது.
இது குறித்து, நாடாளுமன்றத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:நாடு முழுவதும் ரூ.2,327 கோடி, தகுதியில்லாத விவசாயிகளுக்குத் தரப்பட்டிருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இதில் ரூ.231.76 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.158.57 கோடி மீட்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 44 லட்சம் பேருக்கு இந்த நிதியுதவி தரப்பட்டது. இதில் சுமார் 7 லட்சம் பேர் இந்த திட்டத்தில் நிதியுதவி பெறத் தகுதியற்றவர்கள். இவர்களுக்கு மொத்தம் ரூ.321.32 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இவர்களிடம் இருந்துதான் ரூ.158.57 கோடி மீட்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு அமைச்சர் தோமர் தெரிவித்தார்.